மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் வேதனை
Published on

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் சாலையில் கழுக்காணிமுட்டம் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் வளாகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் திருவிழந்தூர், ஆனதாண்டவபுரம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு எடுத்து செல்ல லாரிகள் வரவில்லை. இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலைய வளாகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளது.

நடவடிக்கை

மிகக்குறுகிய இடத்தில் அமைந்துள்ள இந்த கொள்முதல் நிலையத்தில் மேலும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்க இடமில்லாத காரணத்தால், தொடர்ந்து நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களில் அறுவடை செய்த நெல்லை மூட்டைகளில் நிரப்பி வயலின் களத்துமேட்டிலேயே வைத்து இரவு-பகலாக பாதுகாத்து வருகின்றனர். இதனால் திடீரென மழை பெய்தால் மழைநீரில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் உள்ளது.

எனவே மேற்கண்ட நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் எடுத்து செல்ல வேண்டும் என்றும், தொடர்ந்து நெல்லை கொள்முதல் செய்யவும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com