நிலையான விலையால் உருளைக்கிழங்கு சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்

நிலையான கொள்முதல் விலை கிடைப்பதால் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடிக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நிலையான விலையால் உருளைக்கிழங்கு சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி கிராமங்களான நெடுகுளா, கூக்கல்தொரை, மசக்கல், மிளிதேன், கேர்க்கம்பை, கக்குச்சி, கட்டபெட்டு, பில்லிக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், நூல்கோல், பீன்ஸ், முள்ளங்கி, மேரக்காய் போன்ற காய்கறிகளையும், ஐஸ்பெர்க், புரூக்கோழி, சல்லாரை, சுகுனி உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அடுத்தப்படியாக காய்கறி மற்றும் தேயிலை விவசாயத்தையே மக்கள் பெரிதும் நம்பி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தாலும், வறட்சி நிலவியதாலும் காய்கறி விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

சாகுபடி

இந்த நிலையில் நடப்பாண்டில் விவசாயிகள் மீண்டும் தங்களது தோட்டங்களில் காய்கறிகளை சாகுபடி செய்ய தொடங்கினர். இதற்காக தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் மற்றும் உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கியது. ஆனால் பெரும்பாலான காய்கறிகளின் கொள்முதல் விலை உச்சத்தை எட்டியிருந்த நிலையில் சமவெளிகளிலிருந்து வரத்து அதிகரித்த காரணத்தால் கொள்முதல் விலையில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவியது. இதன் காரணமாக கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை தங்களது தோட்டங்களில் சாகுடி செய்திருந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த பல மாதங்களாக ஏற்ற இறக்கமின்றி நிலையான கொள்முதல் விலை கிடைக்க கூடிய உருளைக் கிழங்கை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

அறுவடை

குப்ரி ஜோதி, குப்ரி சுவர்ணா, குப்ரி கிரிராஜ், கிரிதாரி, கோலார், ஐலந்தர், ஊட்டி விதை கிழங்கு என பல்வேறு பெயர்களில் ரகத்திற்கு தக்கவாறு உருளைக்கிழங்கு விதைகள் கிடைக்கின்றன. இவை வேளாண்துறை மூலம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் கிடங்குகளிலிருந்து ஊட்டியில் உள்ள கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு விவசாயிகள் அங்கிருந்து வாங்கிச் செல் கின்றனர்.

மேலும் தனியார் நிறுவனங்களும் ஹைபிரீட் வகை விதைகளையும், விற்பனை செய்து வருகின்றனர். 40 கிலோ எடை கொண்ட விதை ரூ.800 முதல் ரூ.1200 வரை விற்பனையாகிறது.மண்ணை நன்கு பதப்படுத்தி விதைத்து முறையாக தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு வந்தால் 3 மாதத்தில் இருந்து உருளைக்கிழங்கை அறுவடை செய்யலாம்.

கொள்முதல்

ஒரு ஏக்கருக்கு 800 முதல் 900 கிலோ நல்ல தரமான விதைக் கிழங்குகளை விதைத்தால் 8000 கிலோ முதல் 9000 கிலோ உருளைக் கிழங்குகளை அறுவடை செய்ய முடியும். அதாவது 40 கிலோ எடை கொண்ட மூட்டை விதைகிழங்கு 20 மூட்டைகளை ஒரு ஏக்கரில் விதைத்தால் 200 மூட்டை கிழங்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது 140 மூட்டை முதல் 160 மூட்டை உருளைக்கிழங்கு மட்டுமே அறுவடை செய்யப்படுகிறது.

உருளைக்கிழங்கு பயிரை பொறுத்தவரை 17 டிகிரி முதல் 22 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ண நிலையில் நன்கு வளர்வதாலும், நிலையான விலை கிடைப்பதாலும் விவசாயிகள் தற்போது கக்குச்சி, பனஹட்டி, பில்லிக்கம்பை, மடித்தொரை, ஆகிய கிராம பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் உருளைக்கிழங்கை பயிரிட்டுள்ளனர். தற்போது உருளைக்கிழங்கு கிலோ ஒன்றுக்கு மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் 30 முதல் 48 ரூபாய் வரையிலும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் 42 ரூபாய் முதல் 46 ரூபாய் வரையிலும் தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்படுகிறது. இது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com