

திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி வட்டக்குழு சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஊத்துக்குளி தாலுகா பகுதியில் நொய்யல் ஆறு செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஓடியபோது சாயப்பட்டறையாளர்கள் சாயக்கழிவுநீரையும் கலந்தனர். இதனால் ஆற்றில் நுரை அதிகளவு ஏற்பட்டது. ஆனால் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், பொதுமக்கள் சோப்பு போட்டு குளித்ததால் ஆற்றில் நுரை ஏற்பட்டதாக கிண்டலும், கேலியுமாக பதில் கூறியுள்ளார். இந்த பதிலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திறம்பட செயல்பட வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இதுபோல் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் நொய்யல் ஆற்றில் நுரை சென்றதற்கு சோப்பு நீர் காரணம் என்ற விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் சோப்பு போட்டு குளித்தால் இவ்வளவு நுரை செல்லுமா?, சோப்பு போட்டு யாரும் இனி குளிக்கக்கூடாதா? என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். மேலும் சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதாக குற்றம் சாட்டியதுடன் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் பேசும்போது, நொய்யல் ஆற்றில் சென்ற நுரைக்கு டிடர்ஜெண்ட் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிடர்ஜெண்ட் என்றால் சோப்பு நுரை என்று மொத்தமாக கூறிவிடுகிறார்கள். இதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்றார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் இளங்குமரன் விளக்கம் அளித்து பேசியதாவது:-
கோவை மாவட்டத்தில் தினமும் 15 கோடி லிட்டர் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. மக்கள் பயன்படுத்தும் சோப்பில் உள்ள டிடர்ஜெண்ட் என்ற வேதிப்பொருள் ஆற்றில் உள்ள தடுப்பணை பகுதியில் தேங்குகிறது. ஆற்றில் தண்ணீர் அதிக அளவு வரும்போது தடுப்பணை பகுதியில் வேகமாக மோதி பாயும்போது நுரை ஏற்படுகிறது. சாயக்கழிவுநீர் ஆற்றில் கலந்தபோது நீரின் உப்பின் அளவு 6,200 டி.டி.எஸ். முதல் 7,600 டி.டி.எஸ். இருந்தது. ஆனால் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் மூலமாக திருப்பூர் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி முறையில் அந்த நீர் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்தபோது, நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது நொய்யல் ஆறு திருப்பூருக்குள் நுழையும் பகுதியான அக்ரகாரபுத்தூர் பகுதியில் 800 முதல் 900 டி.டி.எஸ். அளவும், மாநகரின் எல்லைப்பகுதியான காசிப்பாளையம் பகுதியில் 1,200 டி.டி.எஸ். உப்பின் அளவும் உள்ளது. இதனால் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலக்கவில்லை.
இருப்பினும் முதலிபாளையம் பகுதியில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் இருந்து குழாய் உடைந்து சாயக்கழிவுநீர் மாணிக்காபுரம் குளத்துக்கு சென்றது. இதை கண்காணிக்க தவறிய பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 23 சாயப்பட்டறைகளை மூடி சீல் வைக்கப்பட்டது. இதுபோன்ற கடும் நடவடிக்கைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் செல்லும் கழிவுநீரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.