பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள்

நெற்பயிர்களை காப்பாற்ற பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள்
Published on

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள பெரியாறு பாசனக் கால்வாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். இரு போக சாகுபடிக்காக கடந்த நவம்பர் 1-ந் தேதி பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் நாற்றாங்கால் அமைத்து விவசாயப் பணி தொடங்கினர்.

பலர் தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்கள் கழித்து அந்த பணியை தொடங்கினர். தற்போது 120 நாட்களில் விளையக்கூடிய நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது பெரியாறு அணையின் நீர் மட்டத்தை கருத்தில் கொண்டு தற்போது தண்ணீர் முறை வைத்து விடப்பட்டு வருகிறது. தண்ணீர் குறைவாக வருவதால் பயிர்கள் கருகி பாதிப்பு ஏற்படும் நிலை உண்டாகும் என்று விவசாயிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.

அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் காலை 11 மணிக்கு விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அங்கு திரண்டு வந்தனர். தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல்போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் அங்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரு முறை தண்ணீர் திறக்க அனுமதி வழங்கக் கோரி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்று கூறினர். அதை விவசாயிகள் ஏற்க மறுத்து உடனடியாக உத்தரவாதம் தரக் கோரினர். இது குறித்து கலெக்டர் தான் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளில் 15 பேரை தேர்வு செய்து போலீசாரே வேனில் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com