சேலம் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைக்கலாம்: கலெக்டர் ராமன் தகவல்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை இருப்பு வைக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைக்கலாம்: கலெக்டர் ராமன் தகவல்
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை இருப்பு வைக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை எந்தவித பிடித்தமும் இன்றி நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக அரசால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் எடப்பாடி ஆகிய 14 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 14 ஆயிரத்து 800 டன் விளைபொருட்கள் இருப்பு வைக்கும் அளவிற்கு 20 கிட்டங்கிகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 30 நாட்களுக்கு விவசாயிகளிடம் இருந்து இருப்பு வைத்துக்கொள்வதற்கு எந்தவித வாடகையும் வசூலிக்கப்படுவதில்லை என்பதோடு தற்சமயம் 3 ஆயிரம் டன் விளைபொருட்களை இருப்பு வைப்பதற்கு இடவசதி உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை பொருளட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருப்பு வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம்.

மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி மற்றும் மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 250 டன் கொள்ளளவு கொண்ட 7 குளிர்பதன கிடங்குகள் உள்ளன. இங்கு விவசாயிகள் எந்தவித கட்டணமுமின்றி தங்களது காய்கறிகள் மற்றும் பழங்களை இருப்பு வைத்துக்கொண்டு பின்னர் விற்பனை செய்யலாம். தற்சமயம் ஊரடங்கு காலத்தில் 264 விவசாயிகளின் மஞ்சள், கரும்பு வெல்லம், மக்காச்சோளம், பருத்தி, தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை போன்ற 342 டன் விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் 85 டன் நிலக்கடலை, மக்காச்சோளம், வரகு, நெல் போன்ற விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று குளிர்பதன கிடங்குகளில் விவசாயிகளின் 201 டன் காய்கறி மற்றும் பழங்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் குளிர்பதன கிடங்குகளில் 200 டன் விளைபொருட்கள் இருப்பு வைப்பதற்கான இடவசதி உள்ளது. எனவே அரசு விவசாயிகளின் நலனுக்காக அறிவித்துள்ள வசதிகளை அனைத்து விவசாய பெருமக்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com