காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மண்டியிட்டு காத்திருப்பு போராட்டம்

காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் 14-வது நாளான நேற்று மண்டியிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மண்டியிட்டு காத்திருப்பு போராட்டம்
Published on

காங்கேயம்,

விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் இருந்து விருதுநகர் நகர் வரை விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கப்படுகிறது.

இப்படி விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்கப்படுவதால், அந்த நிலத்தில் விவசாயம் செய்யமுடியாது. இதனால் விவசாயிகள் வேறு தொழிலுக்கு செல்ல நேரிடும். எனவே இந்த திட்டத்திற்கு மின்சாரத்தை சாலையோரமாக கேபிள் அமைத்து கொண்டு செல்ல வேண்டும். புதிய திட்டங்கள் செல்படுத்தப்படும்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலத்திற்கு ஒவ்வொரு முறையில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே அரசாணை எண் 54-ஐ அனைத்து மாவட்டங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். உயர் அழுத்த கோபுரம் அமைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச இழப்பீடாக தற்போது 50 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளதை உயர்த்தி 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அறவழியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள 38 வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் காங்கேயம் அருகே படியூரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் ஈடுபட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், அரை நிர்வாண போராட்டம், கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம், ரத்தத்தில் உயர்மின்கோபுரம் வேண்டாம் என எழுதி எதிர்ப்பு, கண்களை கட்டிக்கொண்டு போராட்டம், நிலத்தின் பட்டா நகல் எரித்து எதிர்ப்பு, கால்நடைகளுடன் போராட்டம், தென்னை மரக்கன்றுகளுக்கு பூஜை செய்து போராட்டம், முருகன் படம் வைத்து போராட்டம், மணி அடித்தும், பாத்திரங்கள் மூலம் ஒலி எழுப்பும் போராட்டம், விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம், விவசாயிகள் தோப்புக்கரணம் போட்டு போராட்டம், ஒற்றைக்காலில் நின்று போராட்டம் என பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் 14-ம் நாளான நேற்று மதியம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் மண்டியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com