விவசாயியின் பேரீச்சம் மர தோட்டத்தில் கலெக்டர் ஆய்வு

எலச்சிபாளையம் அருகே விவசாயியின் பேரீச்சம் மர தோட்டத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
விவசாயியின் பேரீச்சம் மர தோட்டத்தில் கலெக்டர் ஆய்வு
Published on

எலச்சிபாளையம்,

அரபு நாடுகளில் அதிகளவில் விளையக்கூடிய பேரீச்சம் பழமரங்கள் நமது நாட்டில் ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் எலச்சிபாளையம் ஒன்றியம் மோளியப்பள்ளி கிராமம் கொன்னக்காடு பகுதியில் கணேசன் (வயது 60) என்ற விவசாயி தனது தோட்டத்தில் 8 ஏக்கரில் பேரீச்சம் மரங்களை வளர்த்து வருகிறார். அறுவடைக்கு தயாரான நிலையில் பேரீச்சம் மரங்கள் இருப்பது குறித்து தோட்டகலைத்துறை அதிகாரிகள் மூலம் தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், விவசாயி கணேசன் தோட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். விவசாயம் குறித்து கணேசனிடம் கேட்டறிந்தார்.

ஆய்வு பணியின் போது தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் கண்ணன், உதவி இயக்குனர்கள் ஜெயபிரபா, புவனேஸ்வரி, மஞ்சுளா, தமிழ்செல்வன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்

இதுகுறித்து விவசாயி கணேசன் கூறியதாவது:-

ராஜஸ்தான் சென்றபோது பேரீச்சம் மரங்கள் அடர்ந்து இருப்பதை பார்த்து நாமும் விவசாயம் செய்யலாம் என எண்ணி அது குறித்து விசாரித்தேன். விதைகள் போட்டோ, கன்று வளர்த்தோ, ஒட்டுச் செடியாகவோ பேரீச்சை கிடைக்காது எனவும் அமெரிக்காவில் கலிபோர்னியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் திசுக்கள் மூலம் பேரீச்சம் மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு தரப்படுகிறது எனவும தெரிந்தேன்.

தர்மபுரியில் இவ்வாறு இரண்டு ஆண்டுகள் பரா மரிக்கப்பட்ட கன்றுகளை ஒருவர் விற்பதாக அறிந்தேன். கன்று வாங்கி 8 ஏக்கரில் பயிரிட்டேன். கடந்தஆண்டு உரிய பலன் கிடைக்காமல் வெறுத்து போய் இது சரிவராது மரக்கன்றுகளை அழித்து விடலாம் என நினைத்தபோது எனக்கு மரக்கன்றுகள் கொடுத்தவர் பொறுமையாக இருங்கள், வெளிநாடுகளில் இருந்த விஞ்ஞானிகளை அழைத்த வந்து பார்ப்போம் என சொல்லி நம்பிக்கை ஊட்டினார். அதன்படி ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த வேளாண் விஞ்ஞானிகள் சொன்ன ஆலோசனைப்படி செயற்கை மகரந்த பொடி வாங்கி கருவூட்டல் செய்தேன். காய்பிடித்தது. தற்போது 40 சதவீத பலன் கிடைத்துள்ளது. பணப்பயிரான பேரீச்சைக்கு வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை. எனவே தமிழகத்தில் வங்கி கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com