

திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது காடுவாகொத்தமங்கலம் கிராமம். இந்த கிராமத்தில் 96 எக்டேர் பரப்பளவில் சம்பா பயிரிடப்பட்டிருந்தது. இந்த பயிர்கள் நிவர் மற்றும புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்டன.
அடுத்ததாக தற்போது தாளடி பயிர் நடவு நட்டு கதிர் விடும் நேரத்தில் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. மழைநீர் வடியாததால் இந்த பகுதியில் வயல்கள் ஏரி போல் தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது.
கோரிக்கை
மழைநீரில் மூழ்கிய பயிர்கள் அழுகி இருப்பதாக விவசாயிகள் கண்ணீருடன் கூறுகிறார்கள். இந்த பகுதியில் வடிகால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும், பாடுபட்டு பயிரிட்ட சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கும் விவசாயிகள் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்
மேட்டூர் அணை இந்த ஆண்டு குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் கடந்த ஆண்டு (2020) ஜூன் மாதமே நெல் சாகுபடி பணிகள் தொடங்கி விட்டன.
சம்பா நெற்பயிர்கள் மட்டும் 16 ஆயிரம் எக்டேரில் மேற்கொள்ளப்பட்டது. சம்பா நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்து கதிர்வரும் நேரத்தில் நிரவி புயல் மற்றும் புரெவி புயல் தாக்கியது.
கனமழை
கதிர் வந்து முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மார்கழி மாத கடைசியில் 5 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் கதிர்கள் வயலிலேயே முளைத்தன. தண்ணீரில் மூழ்கிய நெற்கதிர்கள் அழுகி வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது நிலைகுலைந்து போயுள்ளனர்.
விவசாயிகள் கண்ணீர்
கோட்டூர் பகுதியில் 10 ஆயிரம் எக்டேர் நிலத்தில் சாகுபடி செய்த சம்பா நெற்பயிர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. வயல்களில் தண்ணீர் வடிய வழியில்லாத சூழலில், வைக்கோல் கூட மிஞ்சாது என விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இந்த நிலையில் கோட்டூர் அருகே குறிச்சிமூலை உள்ளிட்ட கிராமங்களில் வயலில் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் தண்ணீரில் மிதக்கும் கதிர்களை அறுவடை செய்து காய வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.