கரூர் அமராவதி ஆற்றில் கடைமடை வரை செல்லும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டும் விவசாய சங்கத்தினர் மனு

கரூர் அமராவதி ஆற்றில் கடைமடை பகுதி வரை செல்லும் வகையில் தண்ணீர் திறந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் விவசாய சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
கரூர் அமராவதி ஆற்றில் கடைமடை வரை செல்லும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டும் விவசாய சங்கத்தினர் மனு
Published on

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 284 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ராமலிங்கம் உள்பட விவசாயிகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, இளைஞரணி செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் சேர்ந்து வந்து மனு கொடுத்தனர். அதில், திருப்பூர் அணையிலிருந்து கரூர் அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்று சேரவில்லை. அதற்கு முன்பாகவே தண்ணீர் திறப்பினை நிறுத்தி விட்டதால், விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் அமராவதி நதிநீர் உரிமை பறிபோய்விட்டது. எனவே அணையின் பொறியாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசித்து கரூர் அமராவதியில் கடைமடை வரை தண்ணீர் சென்று வர மீண்டும் தண்ணீர் திறந்துவிட வேண்டும். இன்னும் 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி ஆடு, மாடுகளுடன் வேளாண் உபகரணங்களை வைத்து 10 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மேலும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணிக்கவும் முடிவு செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை

பா.ஜ.க.வின் தாந்தோன்றி ஒன்றிய தலைவர் முத்துசாமி உள்பட நிர்வாகிகள், வெள்ளியணை அருகேயுள்ள வெங்கிடாபுரம் பகுதி மக்களுடன் காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் ஊரில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அன்றாட தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

இதேபோல் பா.ஜ.க. விவசாய அணி, மருத்துவ அணி உள்ளிட்டவற்றின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், கரூரில் சாலையை சேதப்படுத்தும் வகையில் கட்சி மற்றும் அமைப்புகளின் கொடிகளை நடுகின்றனர். எனவே இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நாட்டு நெல் விதைகளை இலவசமாக வழங்கிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

அடிக்கடி பழுதாகும் ஆம்புலன்சு

கரூர் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் கடவூர் ஒன்றிய பகுதி மக்களுடன் திரண்டு வந்து அளித்த மனுவில், கடவூர் ஒன்றிய பகுதிகளில் குடியிருக்க வீடு ஏதுமின்றி ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் நீண்ட நாட்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

108 ஆம்புலன்சு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கமிட்டியின் கரூர் வட்ட ஒருங்கிணைப்பாளர் அப்புசாமி உள்ளிட்டோர் அளித்த மனுவில், க.பரமத்தி, உப்பிடமங்கலம், வெள்ளியணை ஆகிய பகுதிகளில் செயல்படக்கூடிய 108 ஆம்புலன்சு வாகனமானது அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் நோயாளிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தடையின்றி ஆம்புலன்சு சேவை கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் தமிழ், ஆங்கில பாடப்பிரிவினை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. எனவே கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிட வேண்டும். வகுப்பறை மற்றும் நூலக அறை அமைந்துள்ள ஓட்டு கட்டிடம் பழுதடைந்துள்ளது. இதனை சீர் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன மடக்கு குச்சி

இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக கண்பார்வையற்ற இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன மடக்குகுச்சி மற்றும் பிரைலி கடிகாரத்தை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வழங்கினார். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, சமூக பாதுகப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சரவணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கணேஷ், உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணுபிரியா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com