வேகமாக நிரம்பி வரும் பாலாறு-பொருந்தலாறு அணை: பழனி உள்பட 9 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாலாறு-பொருந்தலாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் பழனி உள்பட 9 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வேகமாக நிரம்பி வரும் பாலாறு-பொருந்தலாறு அணை: பழனி உள்பட 9 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

பழனி,

பழனி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் பாலாறு- பொருந்தலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 65 அடி ஆகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது அணையில் 57.94 அடி வரை தண்ணீர் உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 1,120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் 66 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டிவிடும். அப்போது அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும்.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் செல்லும் வழித்தடங்களில் பழனி, பாலசமுத்திரம், பொருந்தல், தாமரைக்குளம், அ.கலையம்புத்தூர், மானூர், கோரிக்கடவு, கீரனூர், அலங்கியம் ஆகிய 9 பகுதிகள் உள்ளன. எனவே அந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் உடைமை, கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com