

கடலூர்,
டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்தும், திருவாரூர் மாவட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும், புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 30-ந் தேதி(அதாவது நேற்று) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று காலை அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் தொடங்கி வைத்தார். போராட்ட குழு அமைப்பாளர் மாதவன் தலைமை தாங்கினார்.
கண்டன உரை
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், மாநில செயலாளர் சந்திரசேகரன், நகர செயலாளர் வேலுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பராயன், நகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் குளோப், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் செந்தில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், நகர செயலாளர் அய்யப்பன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், காவிரி பாசன விவசாய சங்க தலைவர் இளங்கீரன், விவசாய சங்கத் தலைவர்கள் ராமலிங்கம், விவசாய சங்க நிர்வாகிகள் ஜோதி ராமலிங்கம், சந்திரசேகர், சம்பந்தமூர்த்தி, ரமேஷ், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.