பெண் கமிஷனரை ஒருமையில் பேசி திட்டிய ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி.

பெண் கமிஷனரை ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி. ஒருமையில் பேசி திட்டினார். இதனால் பெண் கமிஷனருக்கும், ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி.க்கும் இடையே மந்திரி டி.சி.தம்மண்ணா முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பெண் கமிஷனரை ஒருமையில் பேசி திட்டிய ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி.
Published on

சிவமொக்கா,

சிவமொக்காவில், வளர்ச்சிப் பணிகளை பார்வையிட சென்றபோது மாநகர பெண் கமிஷனரை, ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி. ஒருமையில் பேசி திட்டினார். இதையடுத்து அந்த பெண் கமிஷனருக்கும், ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி.க்கும் இடையே மந்திரி டி.சி.தம்மண்ணா முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

சிவமொக்கா மாநகரில் சீர்மிகு நகர(ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலையில் அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில போக்குவரத்து துறை மந்திரியுமான டி.சி.தம்மண்ணா பார்வையிட சென்றார்.

அவருடன் ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி., மாநகர கமிஷனர் சாருலதா சோமல் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அவர்கள் மாநகரத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மஞ்சுநாத் எம்.எல்.சி. திடீரென, மாநகர கமிஷனர் சாருலதா சோமலிடம், நீங்கள் சரியாக வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிடுகிறீர்களா?, இல்லையா?. சொல்லுங்கள் பார்க்கலாம். இங்கு தெரு மின்விளக்குகள் எரியவில்லை. ஏராளமான வீடுகளில் மின்வினியோகம் தடைபட்டுள்ளது. மின்சாரம் இல்லாமல் மக்கள் இருளில் இருக்கிறார்கள். ஒருநாள் இங்கு இருந்து பாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு மக்களின் கஷ்டம் தெரியும்.

மக்களின் குறைகளை நீங்கள் சரியாக கேட்டு நிர்வகிப்பதில்லை. மக்கள் சாக வேண்டும் என்று நினைக்கிறீர்களா?, மக்கள் பிரச்சினைகளை உங்களிடம் சொல்லக்கூடாதா?. என்னம்மா நீங்கள். உங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமா?. அங்கு மக்கள் சாகட்டுமா? என்று கூறி ஒருமையில் பேசி திட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாநகர கமிஷனர் சாருலதா சோமல், ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி.யை கடுமையாக கடிந்து கொண்டார். அவர் ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி.யை நோக்கி, நீங்கள் எதற்காக ஒருமையில் பேசினீர்கள். சரியாக பேசுங்கள். நான் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறேன். அதற்காக நீங்கள் என் மீது நடவடிக்கை எடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. என்னை ஒருமையில் பேசினால் நான் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று ஆக்ரோஷமாக கூறினார்.

இதனால் கடும் கோபமடைந்த ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி., கமிஷனர் சாருலதா சோமலை நோக்கி, எடுங்கள். நடவடிக்கை எடுங்கள். நானும் அதை பார்க்கிறேன் என்று கூறினார்.

இந்த வாக்குவாதம் அனைத்தும் மந்திரி டி.சி.தம்மண்ணா முன்னிலையில் நடந்தது. இதையடுத்து மந்திரி டி.சி.தம்மண்ணா, ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி.யையும், கமிஷனர் சாருலதா சோமலையும் சமாதானப்படுத்தினார்.

மந்திரி முன்பு ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி.யும், கமிஷனர் சாருலதா சோமலும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com