பெண் ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.15 லட்சம் அபேஸ் கும்பலுக்கு வலைவீச்சு

பெண்களிடம் உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி வாலிபரிடம் ரூ.15 லட்சம் அபேஸ் செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பெண் ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.15 லட்சம் அபேஸ் கும்பலுக்கு வலைவீச்சு
Published on

மும்பை,

மும்பை தகிசர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தான் செய்து வந்த வேலையை இழந்து வீட்டில் இருந்து வந்தார். இதனால் புதிதாக தொழில் தொடங்க ஆன்லைனில் விவரங்களை தேடி வந்தார். அப்போது, அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. இதில் எதிர்முனையில் பேசிய பெண் ஒருவர், தனது பெயர் சோனாலி என அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும் பணக்கார பெண்களிடம் உல்லாசம் அனுபவித்தால் தினமும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினார். மேலும் அதற்கு முன்பணம் செலுத்தவேண்டும் என தெரிவித்தார்.

இதனால் சபலம் அடைந்த வாலிபர், அந்த பெண் கூறியது உண்மை என நம்பி அவர் கூறிய வங்கிக்கணக்கில் ரூ.26 ஆயிரத்தை செலுத்தினார்.

ரூ.15 லட்சம்

பின்னர் சோனாலி அந்த வாலிபரின் செல்போனுக்கு 3 பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அந்த பெண்களை தொடர்பு கொண்டு உல்லாசம் அனுபவிக்கலாம் என தெரிவித்தார்.

உடனே வாலிபர் சோனாலி தெரிவித்த ஒரு பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அந்த பெண் தன்னை சந்திக்க வேண்டுமெனில் முதலில் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தை தனது வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். இதனால் வாலிபர் அந்த பணத்தையும் செலுத்தினார். இவ்வாறு கடந்த 20 நாட்களில் ரூ.15 லட்சம் வரை வாலிபர் அந்த பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தி உள்ளார்.

போலீசில் புகார்

இருப்பினும் அந்த பெண்களை அவரால் சந்திக்க முடியவில்லை. இதனால் வெறுப்படைந்த வாலிபர் தனது பணத்தை திருப்பி தருமாறு கோரினார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்கள், அவரது அழைப்பை துண்டித்தனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் சம்பவம் குறித்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடி கும்பலை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com