வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர் அருகே வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்
Published on

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் காரில் திரிவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிளாய் கிராமத்தில் 2 கார்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தன. போலீசாரை கண்டதும் அதில் இருந்த மர்மநபர்கள் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமம் தெரு வீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் விஸ்வா என்ற குள்ள விஸ்வா (வயது 30), அதே பகுதியை சேர்ந்த சந்துரு (24), பாலசந்தர் (22), மகேஷ் (22), தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தை அடுத்த அலங்காதிட்டி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (35) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் பட்டா கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதும், கூட்டு சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 14 பட்டா கத்திகள், 6 நாட்டு வெடிகுண்டுகள், 2 கார், ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சதி திட்டத்தின் போது உடன் இருந்த ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கருமாங்கழனி பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி வக்கீல் மகாலட்சுமி (30) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற ரவுடி விஸ்வா சுவர் ஏறி குதிக்கும் போது அவரது கால் எலும்பு முறிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com