

வையம்பட்டி,
திருச்சி மாவட்டம் ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் சற்குணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சமூக இடைவெளியோடு மாணவ-மாணவிகள் பள்ளியில் கூடினர். மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது, கிராமப்புற மாணவிகள் முன்னேற கல்வி அவசியம் என்றும் பெற்றோர்களுக்கும், மாணவிகளுக்கும் பரஸ்பரம் நம்பிக்கையும் முக்கியம் என்றார்.
பின்னர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் துணை போலீஸ் சூப்பிரண்டு, ஆசிரியைகள் ஜெயராணி, நர்மதா மற்றும் மாணவிகளுக்கு மாலை அணிவித்து தலையில் கிரீடம் சூட்டி கவுரவிக்கப்பட்டனர். மதியம் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஆசிரியர்கள் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முற்றிலும் வித்தியாசமாக நடைபெற்ற இவ்விழாவை பெற்றோர்கள் பெரிதும் பாராட்டினர்.
இதுபோல் தா.பேட்டை அருகே காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர் தண்டபாணி அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை கீதா சிறப்புரையாற்றினார். அப்போது பெண்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.