நடப்பாண்டில் முதல் முறையாக நிரம்பின கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் எடியூரப்பா சிறப்பு பூஜை 5 தடவை பாகினா சமர்ப்பணம் செய்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என பெருமிதம்

நடப்பாண்டில் முதல் முறையாக நிரம்பிய கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் முதல்-மந்திரி எடியரப்பா சிறப்பு பூஜையை நிறைவேற்றினார். பின்னர் பேசிய அவர், 5 தடவை இங்கு பாகினா சமர்ப்பணம் செய்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று பெருமிதத்துடன் கூறினார்.
நடப்பாண்டில் முதல் முறையாக நிரம்பின கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் எடியூரப்பா சிறப்பு பூஜை 5 தடவை பாகினா சமர்ப்பணம் செய்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என பெருமிதம்
Published on

மண்டியா,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை தற்போது தீவிரம் அடைந்த கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் முக்கிய அணைகளான மைசூருவில் உள்ள கபினி, மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் கனமழையால் காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த நிலையில் இரு அணைகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பின.

கர்நாடகத்தை பொறுத்தவரை அணைகள் நிரம்பினால், முதல்-மந்திரியாக இருப்பவர் அங்கு நேரில் சென்று வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜை நடத்தி அணை நீரில் பாகினா சமர்ப்பணம் செய்வது வழக்கம். அதுபோல் நடப்பாண்டில் இரு அணைகளும் முதல் முறையாக நிரம்பியதை தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா அங்கு சென்று சிறப்பு பூஜை நடத்த முடிவு செய்தார்.

அதன்படி அவர் நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் மைசூருவுக்கு வந்தார். பின்னர் அவர் கார் மூலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணாம்பாடி கிராமத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சென்றார். அங்கு அவருக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் எடியூரப்பா கே.ஆர்.எஸ். அணையை சுற்றி பார்த்தார்.

பின்னர் அவர் அணை நிரம்பியதை தொடர்ந்து வருணபகவானுக்கும், காவிரி தாய்க்கும் சிறப்பு பூஜை நடத்தினார். இந்த பூஜை அர்ச்சகர் பானுப்பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில் எடியூரப்பா கலந்துகொண்டு வருணபகவான், காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்து, நவதானியங்கள், பழங்கள், வெற்றிலை பாக்கு, பூக்கள் ஆகியவற்றை ஒரு முறத்தில் போட்டு, மற்றொரு முறத்தால் மூடினார். பின்னர் அந்த முறத்தை கே.ஆர்.எஸ். அணையின் நீரில் சமர்ப்பணம் செய்தார்.

இதைதொடர்ந்து எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருணபகவான் கருணையால் இந்த ஆண்டும் மாநிலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய அணைகள் நிரம்பியுள்ளன. நான் முதல்-மந்திரியாக இருந்த போது 5 தடவை கே.ஆர்.எஸ். அணை நிரம்பியுள்ளது. இதனால் 5 முறை இந்த அணையில் பூஜை செய்துள்ளேன். இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம், பாக்கியம். தற்போது போல் ஆண்டுதோறும் அனைத்து அணைகளும் நிரம்ப வேண்டும் என்று கடவுகளை பிரார்த்திக்கிறேன். விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி அணையில் சிறப்பு பூஜை செய்து வழிபடுவது எனக்கு பெருமையாக உள்ளது.

கர்நாடகத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால், விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சி வருகிற காலங்களிலும் நீடிக்க வேண்டும். இதனால் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. எனது தலைமையிலான அரசு விவசாயிகளை காக்கும் அரசு. பல்வேறு விவசாய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அதுபோல் மழையால் பாதிக்கப்பட்ட விவாசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே யாரும் கவலைப்பட வேண்டாம். கே.ஆர்.எஸ். அணை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தற்போது விசுவேஸ்வரய்யா, நால்வடி கிருஷ்ணராஜஉடையார் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணை மற்றும் பிருந்தாவன் பூங்காவில் உலகதரத்திலான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன். கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற ரூ.74 ஆயிரம் கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ரூ.8.48 கோடி செலவில் கே.ஆர்.எஸ். அணையில் புதியதாக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பும் திட்டமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து கடந்த ஒரு ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களின் சாதனை கையேட்டை முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டார்.

மந்திரிகள் பங்கேற்பு

அதன் பிறகு எடியூரப்பா காரில் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு சென்றார். அந்த அணை நிரம்பியதை தொடர்ந்து, அங்கும் அவர் வருணபகவானுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் பாகினாவை அணை நீரில் சமர்ப்பணம் செய்தார். மேலும் கபிலா ஆற்றின் குறுக்கே புதியதாக பாலம் கட்டவும், இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல்லையும் எடியூரப்பா நட்டுவைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநில நீர்ப்பாசனத் துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, தோட்டக்கலைத் துறை மந்திரி நாராயணகவுடா, மாநில கூட்டுறவு துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், மண்டியா தொகுதி எம்.பி. சுமலதா, பிரதாப் சிம்ஹா எம்.பி., அன்னதாணி எம்.எல்.ஏ., கலெக்டர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com