இறுதி பட்டியல் வெளியீடு: தேனி மாவட்டத்தில் 11¼ லட்சம் வாக்காளர்கள்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் 11¼ லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இறுதி பட்டியல் வெளியீடு: தேனி மாவட்டத்தில் 11¼ லட்சம் வாக்காளர்கள்
Published on

தேனி,

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் வெளியிட்டார். அதனை பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கார்த்திகாயினி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இறுதி வாக்காளர் பட்டியலின் படி தேனி மாவட்டத்தில் 11 லட்சத்து 24 ஆயிரத்து 500 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 826 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 72 ஆயிரத்து 479 பெண் வாக்காளர்கள், 195 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார்கள்.

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,36,257 ஆண் வாக்காளர்கள், 1,39,640 பெண் வாக்காளர்கள், 34 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,75,931 வாக்காளர்களும், பெரியகுளம் தொகுதியில் 1,39,900 ஆண் வாக்காளர்கள், 1,45,028 பெண் வாக்காளர்கள், 103 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,85,031 வாக்காளர்களும் உள்ளனர்.

போடி தொகுதியில் 1,36,050 ஆண் வாக்காளர்கள், 1,41,893 பெண் வாக்காளர்கள், 21 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,77,964 வாக்காளர்களும், கம்பம் தொகுதியில் 1,39,619 ஆண் வாக்காளர்கள், 1,45,918 பெண் வாக்காளர்கள், 37 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,85,574 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. பொதுமக்கள் இவற்றை பார்வையிட்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும், 1-1-2021-ம் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணிகள் நேற்று தொடங்கியது. அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் இணையதளம் வாயிலாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக மனு அளிக்கலாம் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com