

சென்னை,
சென்னை சவுகார்பேட்டை பகுதியில் கண்ணன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் கோபிநாத் கடந்த 9-ந்தேதி ரூ.98 லட்சத்தை எடுத்துக்கொண்டு திருச்சி புறப்பட்டார். பாரிமுனையில் இருந்து மாநகர பஸ்சில் கோயம்பேடு சென்று அங்கிருந்து திருச்சிக்கு பஸ்சில் செல்ல திட்டமிட்டு இருந்தார்.
கோபிநாத் பணத்துடன் மாநகர பஸ்சில் சென்றார். பஸ் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது இன்னோவா காரில் அங்கு வந்த சிலர் தங்களை போலீசார் என்று கூறிக்கொண்டு கோபிநாத் பயணம் செய்த மாநர பஸ்சில் ஏறினார்கள். கோபிநாத்தின் பையில் கஞ்சா இருப்பதாக சந்தேகப்படுவதாக கூறி, பையை சோதனை போட்டனர். பின்னர் கோபிநாத்தை கையில் விலங்கு போட்டு பஸ்சை விட்டு இறக்கினார்கள்.
அவர் வைத்திருந்த ரூ.98 லட்சம் உள்ள பணப்பையை அந்த நபர்கள் பிடுங்கிக்கொண்டனர். கோபிநாத்தை போலீஸ் வேடத்தில் வந்தவர்கள், தாங்கள் வந்த இன்னோவா காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச்சென்றனர்.
தாம்பரத்தை அடுத்த வண்டலூர் பகுதியில் கோபிநாத்தை காரில் இருந்து தள்ளி விட்டனர். பின்னர் அந்த கொள்ளைக்கும்பல் காரில் பணத்துடன் தப்பிச்சென்று விட்டது.
இந்த கொள்ளை சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார்அகர்வால், இணை கமிஷனர் ஜெயகவுரி, துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜெகதீஷ்வரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வீரக்குமார், இளங்கோவன், வினாயகம் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.
கோபிநாத்தை பஸ்சை விட்டு இறக்கி காரில் ஏற்றி கடத்திச்சென்ற கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை பஸ்நிறுத்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
கேமரா காட்சியில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கொள்ளையர்கள் பற்றி போலீசார் துப்பு துலக்கினார்கள். முதலில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த கலந்தர் என்ற கொள்ளையனை போலீசார் மடக்கினார்கள். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அவர் போலீஸ் கையில் சிக்கியதை அறியாத மற்ற கொள்ளையர்கள் அவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் ஒன்றை அனுப்பினார்கள்.
அதில் கோவா தப்பிச்செல்ல திட்டம் வகுத்து அனுப்பி இருந்தனர். திட்டப்படி நேற்று அதிகாலை சென்னை விமானநிலையத்திற்கு கொள்ளையன் கலந்தரை வரும்படி வாட்ஸ் அப் தகவலில் தெரிவித்து இருந்தனர். அங்கிருந்து விமானத்தில் கோவா செல்ல திட்டம் வகுத்து இருந்தனர்.