

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரில் வசிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, அங்குள்ள அம்பேத்கர் இரவு பாட சாலையில் சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் கற்றுத் தரப்படுகிறது. இந்நிலையில், இங்கு பயிலும் மாணவர்களில் ராஜலட்சுமி, எலிஷா, ரோசினி, சஞ்சய், சந்தியா உள்ளிட்ட பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் நாளை (சனிக்கிழமை) நேபாள் நாட்டில் நடைபெறும் மாணவர்களுக்கான சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கிடையே, மாணவர்கள் பயணம் மேற்கொள்ள பணம் இல்லாத நிலையை அறிந்த தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி, போட்டிக்கு செல்ல இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிதியை வழங்கினார்.
அப்போது போலீஸ் கமிஷனர் ரவி பேசுகையில், கண்ணகி நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட குடிசை மாற்று குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களுக்கு ஆலோசனைகளை வழங்கி குற்றச்செயல்களில் ஈடுபடாதவாறு உருவாக்குவதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார். பின்னர் கண்ணகி நகர் போலீஸ் நிலையம் அருகே, மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டு வரும் விளையாட மைதானத்தை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் கமிஷனர் ரவி ஆய்வு செய்தார்.