திருச்சி அருகே சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருச்சி அருகே சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி அருகே சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
Published on

தா.பேட்டை,

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் அகிலா, திருச்சி தனியார் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் நளினி ஆகியோர் திருச்சி கல்லணை செல்லும் சாலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சோழர்கால கல்வெட்டுகளை கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து வரலாற்றாய்வு மைய இயக்குனர் கலைக்கோவன் கூறியதாவது:-

கைலாசநாதர் கோவிலின் தோற்றமும், அதன் முன் மண்டபமும் முற்சோழர் கலைமுறையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்கால தோரண சிற்பங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இக்கட்டிடங்களில் மகரதோரணங்களில் சிறு சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன. அவற்றுள் மிக தெளிவாகவும், தனித்தன்மையுடன் விளங்கும் மகிடாசூரமர்த்தினி வடிவம் ஒப்பற்ற அழகுடன் விளங்குகிறது.

திருச்சி மாவட்ட கோவில்களில் வேறெங்கும் இத்தகு அமைப்பில் மகிடாசூரமர்த்தினியை தோரண சிற்பமாக காண முடிவதில்லை. கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள தேவியருடன் யோக நரசிம்மரும் காட்சியளிப்பது குறிப்பிடதக்கது. கோவில் முக மண்டபத்தில் தெற்கு தாங்குதளத்தில் இரண்டு கூட்டல் குறிகளுக்கிடையில் சோழர்கால அளவுகோல் 1.64 மீட்டர் நீளமுள்ளதாக பொறிக்கப்பட்டுள்ளது. இத்தகு அளவு கோல்கள் நன்செய், புன்செய் நிலங்களை அளப்பதற்கு பயன்பட்டுள்ளன. கோவிலின் தெற்கு தாங்கு தளத்தில் பெரிதும் சிதைந்து காணப்படும் விக்கிரம சோழரின் (1112-1136) கல்வெட்டு இக்கோவிலில் இறைவன் முன் திருவிளக்கேற்ற கொடையாளி ஒருவர் கோவிலின் சிவபிராமணரிடம் பத்துகாசுகள் அளித்தது தெரிய வருகிறது.

இறைவழிபாடு நிகழ்த்துபவர்களே இந்த விளக்கை ஏற்றவேண்டும் என்பது கொடையாளியின் வேண்டுகோளாக இருந்துள்ளது. விக்கிரமசோழரின் ஆட்சி காலத்தில் இதுபோன்ற விளக்குகொடைகள் இப்பகுதியில் மிக பரவலாக வழங்கப்பட்டுள்ளன. பாடல்பெற்ற பல்வேறு கோவில்களில் நந்தாவிளக்கு, சந்திவிளக்கு, திருவிளக்கு, பகல்விளக்கு என பல்வகை விளக்குகளை ஏற்ற அளிக்கப்பட்ட கொடைகள் குறித்த கல்வெட்டுகள் காணமுடிகிறது. இந்தபுதிய கண்டுபிடிப்புகள் கல்வெட்டு ஆய்வு துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com