பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் அதிகாரிகள் எச்சரிக்கை

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் அதிகாரிகள் எச்சரிக்கை
Published on

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகில், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நகராட்சி கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் சுகாதார பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ் நிலையத்தில் புகை பிடித்த கல்லூரி மாணவர், துப்புரவு தொழிலாளி உள்பட 14 பேரை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சிகரெட், பீடி மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், மாரியப்பன், ஞானசேகர் மற்றும் நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள், போலீசார் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- பொள்ளாச்சி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் மற்றும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கட்டிட கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் இருத்தல், கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வைக்கும் தொடர் குற்றங்கள், பொது இடங்களில் துப்புதல், திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழித்தல், பொது இடங்களில் குப்பைகளை தீவைத்து எரிப்பது உள்பட பல்வேறு காரணங்களுக்கு அபராதம் விதிக் கப்படுகிறது.

இதுவரைக்கும் பொது இடங்களில் புகை பிடித்த 14 பேரிடம் இருந்து தலா ரூ.100 வீதம் ரூ.1400, குப்பைகளை ரோட்டில் கொட்டியவர்கள் மற்றும் எரித்தவர்கள் 210 பேரிடம் இருந்து ரூ.100 வீதம் ரூ.21 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததற்காக இதுவரைக்கும் ரூ.5800 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிகரெட் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் சிகரெட் பாக்கெட்கள் பறிமுதல் செய்து, உரிய அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com