பரமக்குடியில் தடை உத்தரவை மீறியவர்களுக்கு அபராதம் - போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் பொதுமக்கள்

பரமக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
பரமக்குடியில் தடை உத்தரவை மீறியவர்களுக்கு அபராதம் - போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் பொதுமக்கள்
Published on

பரமக்குடி,

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வருகிற 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு பிரகடனம் செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து பரமக்குடி பகுதியில் நேற்று அதிகாலை முதல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களையும், மீன்கள் மற்றும் இறைச்சிகளையும் வாங்குவதற்காக கடைகளுக்கு வந்தனர். பின்பு 11 மணிக்குமேல் போலீசார் ஓட்டப்பாலம், ஐந்துமுனை சந்திப்பு, பஸ் நிலையம், சந்தைப்பேட்டை, கிருஷ்ணா தியேட்டர் உள்பட பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள்கள், கார்களில் வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் 2-வது முறையாக பிடிபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதே போல பொதுமக்களின் தேவைக்காக திறந்திருந்த கடைகளில் கூட்டம் கூடாமல் உடனடியாக பொருட்களை வழங்கி அனுப்புமாறு வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர். பரமக்குடி, பார்த்திபனூர், சத்திரக்குடி, எமனேசுவரம், நயினார்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது, வீதிகளில் கூட்டம் கூடக்கூடாது, குழந்தைகளை வீட்டிற்கு வெளியில் விளையாட அனுமதிக்கக் கூடாது என நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். போலீஸ் கட்டுப்பாட்டு வளைத்துக்குள் பொதுமக்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com