குப்பை கிடங்கில் தீ விபத்து 6 மணிநேரம் போராடி அணைத்தனர்

திருமுல்லைவாயல் அருகே குப்பை கிடங்கில் எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் 6 மணிநேரம் போராடி அணைத்தனர்.
குப்பை கிடங்கில் தீ விபத்து 6 மணிநேரம் போராடி அணைத்தனர்
Published on

ஆவடி,

திருமுல்லைவாயல் அருகே குப்பை கிடங்கில் எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் 6 மணிநேரம் போராடி அணைத்தனர்.

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி அபர்ணா நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பழைய பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து வைத்து, அவற்றை மறுசுழற்சி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இங்கு பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் இங்கு வேலை நடக்காமல் கடந்த 6 மாதங்களாக சுமார் 50 டன் அளவிலான பாலிதீன், நைலான், பிளாஸ்டிக், ரப்பர், பிஸ்கட் கவர், உள்ளிட்ட பொருட்கள் குப்பை கிடங்கில் மலைபோல் குவிந்து கிடந்தது.

தீ விபத்து

நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அம்பத்தூர், மதுரவாயல், ஆவடி ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பிளாஸ் டிக், ரப்பர் பொருட்கள் என்பதால் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்தது.

இதற்கிடையில் தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்துபோனதால் சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் சுமார் 6 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 6 மணநேர போராட்டத்துக்கு பிறகு நேற்று காலை 8 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் குப்பை கிடங்கில் சேமித்து வைத்து இருந்த மொத்த பொருட்களும் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com