

முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள கொமாரபாளையத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 44). இவர் அதே பகுதியில் சொந்தமாக தென்னை நார் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த மில்லில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தென்னை நாரில் இருந்து கட்டி தயாரிக்கும் எந்திர வளாக பகுதியில் திடீரென்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று எந்திர பகுதி முழுவதும் வேகமாக பரவி, அருகில் இருந்த தென்னை நார் குவியலிலும் பரவியது. இதனால் அங்கிருந்த தென்னை நார் அனைத்தும் பற்றி எரிந்து சாம்பலானது.
இதுபற்றி தகவல் அறிந்த மில் ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல்கொடுத்துவிட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனே காங்கேயம், சென்னிமலை, மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் தென்னை நார் கட்டிகள் உற்பத்தி செய்யும் எந்திரங்கள், கட்டிட பகுதிகள், இருப்பு வைக்கப்பட்டிருந்த 25 டன் தென்னை நார் கட்டிகள் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.