ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் தீ

ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு மீண்டும் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் தீ
Published on

ஏற்காடு,

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த 4 நாட்களாக பயங்கரமான காட்டுத்தீ பரவி வந்தது. இதையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் இணைந்து செயல்பட்டனர். அதே நேரத்தில் இந்த காட்டுத்தீ காரணமாக கடந்த 2 நாட்களாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மேலும் மாவட்ட கலெக்டர் ரோகிணி உத்தரவின் பேரில், சேலம் கருங்காலி, குருவம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த பகுதிகளில் பரவிய காட்டுத்தீ நேற்று முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில், ஏற்காடு கருங்காலி மற்றும் குருவம்பட்டி ஆகிய பகுதிகளில் பிற்பகலில் இயல்பு நிலை திரும்பியது. மேலும் 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த வாகன போக்குவரத்தும் நேற்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில், ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகே மீண்டும் காட்டுத்தீப்பற்றி மரங்கள், புதர்கள் எரிய தொடங்கின. இது குறித்து தகவல் கிடைத்ததும், ஏற்காடு வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து தீ ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று (புதன்கிழமை) காலைக்குள் இந்த காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதே நேரத்தில் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு வாகன போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்றது. அதில் ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com