திருப்பத்தூர் அருகே செங்கல் சூளையில் தீவிபத்து; டிராக்டர் எரிந்து நாசம்

திருப்பத்தூர் அருகே காரையூரில் தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான செங்கல் சூளையில் நேற்று முன்தினம் இரவு தீவிபத்து ஏற்பட்டது.
திருப்பத்தூர் அருகே செங்கல் சூளையில் தீவிபத்து; டிராக்டர் எரிந்து நாசம்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் செழியன். தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு சொந்தமான செங்கல் சூளை திருப்பத்தூர் அருகே காரையூரில் திருவுடையார்பட்டி சாலையில் உள்ளது. இந்த சூளையில் 2 கூடாரம் அமைத்து அங்கு செங்கல் வைக்கப்பட்டு சூடேற்றுப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த செங்கல் சூளையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் சூளையில் இருந்த 2 கூடாரங்களும் எரிந்தன. தென்னை ஓலையால் வேயப்பட்ட கூடாரம் என்பதால் தீ வேகமாக பரவி 2 கூடாரங்களும் முற்றிலும் எரிந்தது. இதனால் அந்த இடமே தீக்கறையாக காணப்பட்டது.

செங்கல் சூளையில் எரிந்த தீ, அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டிராக்டர் மீது பற்றியது. அந்த டிராக்டர் தீவிபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் பக்கத்தில் இருந்த மற்றொரு டிராக்டர் மீது லேசாக தீப்பற்றியது. அதற்குள் செங்கல் சூளை தொழிலாளர்களும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் தண்ணீரை ஊற்றி டிராக்டரில் எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அந்த டிராக்டர் தப்பியது.

தீவிபத்து குறித்து அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தால் செங்கல் சூளை கூடாரங்களில் வைக்கப்பட்டிருந்த செங்கல்கள் மற்றும் சில பொருட்கள் நாசமாயின. இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com