

கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஊருக்குள் நுழையும் அவை விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. கூடலூர் தொரப்பள்ளி, குனில், புத்தூர்வயல், பாண்டியாறு, புளியாம்பாரா, நாடுகாணி, தேவாலா உள்ளிட்ட பகுதியில் காட்டுயானைகள் தொடர்ந்து முகாமிடுகின்றன. சில நேரங்களில் அவை பொதுமக்களையும் தாக்கி வருகின்றன. காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல இடங்களில் வனத்துறையினர் அகழிகள் வெட்டி வைத்துள்ளனர்.
இருப்பினும் காட்டுயானைகளின் வருகையை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதனால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டுயானைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து தேவாலா வனத்துறையினர் கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
கூடலூர் பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட கழகம் ரேஞ்சு-1 பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் வனத்துறையினர் கூறியதாவது:-
ஊருக்குள் காட்டுயானைகள் வந்தால் தொந்தரவு செய்யக்கூடாது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். இதன் மூலம் நேரில் வந்து காட்டுயானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வனப்பகுதிக்குள் செல்லும்போது தீ பற்ற வைக்கக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. கோடை காலம் நெருங்குவதால் காட்டுத்தீ பரவ வாய்ப்பு உள்ளது. எனவே வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த எச்சரிக்கையை மீறி தீ வைக்கும் நபர்கள் குறித்த தகவல்களை வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். வனப்பகுதிக்குள் தீ வைத்தால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே காட்டுத்தீயில் இருந்து வனப்பகுதியை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இதேபோன்று இரவில் வெளியே நடந்து செல்லுதல், வீட்டை விட்டு வெளியே வரும்போதும் பொதுமக்கள் தங்களது கையில் டார்ச் லைட்டுகளை வைத்து பயன்படுத்த வேண்டும். இதனால் சற்று தூரத்தில் காட்டுயானைகள் நின்றிருந்தாலும் தெரியவரும். அதற்கு ஏற்ப பாதுகாப்பான இடத்தை தேடி ஓட முடியும். இதுதவிர காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி வனத்துறை சார்பில் அனுப்பப்படும். இதை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.