

பாகூர்,
புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் மற்றும் தமிழக எல்லையில் அமைந்துள்ள நல்லவாடு கிராம மீனவர்களுக்கு இடையே மீன் பிடிப்பது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 28-ந்தேதி இரு கிராம மீனவர்களுக்கும் நடுக் கடலில் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி நள்ளிரவு நல்லவாடு கிராமத்தில் மீன்பிடி பொருட்கள் பாதுகாப்பு கிடங்கில் வைத்திருந்த வலைகளை மர்மநபர்கள் தீவைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றனர். முன்விரோதம் காரணமாக வீராம்பட்டினம் மீனவர்கள் தங்கள் வலைகளுக்கு தீ வைத்ததாக கருதிய நல்லவாடு மீனவர்கள், அவர்களை தாக்க ஆயுதங்களுடன் தயாரானார்கள். பதிலடி கொடுக்க வீராம்பட்டினம் மீனவர்களும் திரண்டனர். இதனால் இரு கிராமங்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதுபற்றி தகவல் அறிந்து புதுச்சேரி போலீஸ் சூப்பிரண்டு (தெற்கு பகுதி) வீரபாலகிருஷ்ணன், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் 2 கிராமங்களிலும் குவிக்கப்பட்டனர். வலைகளை எரித்தவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வருங்காலங்களில் பிரச்சினை மற்றும் மோதல் சம்பவத்தில் யாரும் ஈடுபடக் கூடாது என போலீசார் அறிவுறுத்தினர்.
வலைகள் எரிக்கப்பட்ட பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க நல்லவாடு, வீராம்பட்டினம் மீனவர் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் மீன்பிடி வலைகளுக்கு தீ வைத்தது குறித்து வீராம்பட்டினத்தை சேர்ந்த கவின் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளி இனியன் என்பவரை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் நல்லவாடு, வீராம்பட்டினம் கிராமங்களில் நேற்று 2-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராமத்துக்குள் வந்த சந்தேக நபர்களை பிடித்து விசாரித்தனர்.
மீன்பிடி வலையை எரித்தவர்களை கைது செய்யக்கோரி நல்லவாடு மீனவர்கள் 3-வது நாளாக நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மோதல் ஏற்படாமல் இருக்க இரு கிராம பஞ்சாயத்தார்களை அழைத்து பொதுவான இடத்தில் வைத்து மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்த மீன்வளத்துறை அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.