பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிப்பு: பெண் தொழிலாளர்கள் அமைச்சரிடம் கதறல்

எங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை பட்டாசு ஆலைகளை திறந்தால் மட்டும் போதும் என்று அமைச்சரிடம் பட்டாசு ஆலை பெண் தொழிலாளர்கள் கதறினார்கள்.
பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிப்பு: பெண் தொழிலாளர்கள் அமைச்சரிடம் கதறல்
Published on

தாயில்பட்டி,

சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளால் கடும் பாதிப்புக்குள்ளான விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலை அதிபர்கள் பட்டாசு ஆலைகளை காலவரையின்றி மூடி விட்டனர். இதனால் அதை நம்பி வாழ்ந்த லட்சக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். வழக்கமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பட்டாசு தயாரிப்பு முழு வீச்சில் நடைபெறும். இதனால் தொழிலாளர்கள் வருமானம் ஈட்டுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

ஆலைகளை திறக்கக்கோரி மாவட்டத்தின் பல இடங்களில் பல வகையில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று சிவகாசி அருகே வெம்பக்கோட்டை பக்கம் உள்ள கல்லமநாயக்கர்பட்டி கிராமத்தில் 30 படுக்கை வசதி கொண்ட தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வரும்போது புலிப்பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த பட்டாசு ஆலை பெண் தொழிலாளர்கள் அவரை சூழ்ந்தனர்.

பட்டாசு ஆலை மூடப்பட்டு விட்டதால் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கே வழியின்றி தவிக்கிறோம். மகளிர் குழுவிடம் வாங்கிய கடனை அடைக்க இயலவில்லை. வீட்டு வாடகை கொடுக்க இயலவில்லை. எங்களுக்கு வேறு எதுவும் செய்ய வேண்டாம். ஆலைகளை திறந்தால் மட்டும் போதும் என்று பெண்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அமைச்சரிடம் தெரிவித்தனர். 22-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்து முடிவு தெரியும் வரை காத்திருக்க இயலாது, எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறினர். பலரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

அவர்களிடம் அமைச்சர் கூறியதாவது:- அரசு என்றென்றும் உங்கள் பக்கம் நிற்கிறது. எத்தனையோ தடைகளை தகர்த்து இருக்கிறோம். இப்போதும் முதல்-அமைச்சரிடம் பேசி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாக்பூரில் தொடர்பு கொண்டு பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 22-ந் தேதி விசாரணைக்கு வரும் வழக்கில் வாதாட தனியாக வக்கீல் நியமித்து இருக்கிறோம். வேதிப்பொருள் குறித்து தெளிவான முடிவு இல்லாததுதான் பிரச்சினையாகும். எதற்கும் கவலைப்படாதீர்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

இதைத்தொடர்ந்து பெண்கள் சமாதானம் அடைந்தார்கள். ஆனாலும் விழா முடிந்து திரும்பி வரும்போதும் அமைச்சரிடம் இதுகுறித்து வேண்டுகோள் விடுத்ததனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com