முதல் கட்ட வாக்குப்பதிவு ஓட்டு சீட்டுகளுக்கு தீ வைத்ததாக 50 பேர் மீது வழக்கு

முதல் கட்ட வாக்குப்பதிவின்போது ஓட்டு சீட்டுகளுக்கு தீ வைத்ததாக 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முதல் கட்ட வாக்குப்பதிவு ஓட்டு சீட்டுகளுக்கு தீ வைத்ததாக 50 பேர் மீது வழக்கு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அப்போது திடீரென வாக்குச்சாவடிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் வேட்பாளர்களின் முகவர்களை மிரட்டியும், அங்கு இருந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த 2 வாக்குச்சாவடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் அங்கு இருந்த மேஜை நாற்காலிகளை தூக்கி வீசிவிட்டு வாக்குச்சீட்டுகளை வெளியே கொண்டுவந்து தீ வைத்து எரித்து விட்டு அந்த அறையையும் பூட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதனால் அந்த 2 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக அந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏழுமலை, சுரேஷ் செல்வகுமார் ஆகியோர் நடந்த சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாக்குச்சாவடியை சூறையாடி ஓட்டு சீட்டுகளுக்கு தீ வைத்ததாக பாப்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது அங்கு இருந்த சிலர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி திடீரென காக்களூர் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com