

பாகூர்,
பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் ஒரு பகுதியை தமிழக அரசும், மற்றொரு பகுதியை புதுவை அரசும் பயன்படுத்தி வருகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரி கிராமப்புற பகுதியை சேர்ந்த மாட்டு வண்டிகள் மூலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் புதுச்சேரி எல்லைக்குட்பட்ட தென்பெண்ணை ஆற்று பகுதியில் மணல் எடுக்க பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்து இருந்தது. இதனால் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அதே சமயத்தில் தமிழக பகுதியான வான்பாக்கம் பகுதியில் தமிழக அரசு மணல் குவாரி அமைத்து உள்ளது. இங்கிருந்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மூலம் கொண்டு வரப்படும் மணல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தென்பெண்ணை ஆற்றில் புதுச்சேரி அரசு சார்பில் மணல் குவாரி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்களும், பொதுமக்களும் போராட்டங்கள் நடத்தினார்கள். இதன் எதிரொலியாக பாகூரில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி தெற்கு மாவட்ட துணை கலெக்டர் உதயக் குமார், பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர் கார்மேகம், இளநிலை பொறியாளர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று தென்பெண்ணையாற்றில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மணமேடு பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறிக்கை தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர். எனவே மணமேடு பகுதியில் விரைவில் மணல் குவாரி திறக்கப்படும் எனத்தெரிகிறது.