கரூர் நகராட்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் மனுக்களை பெற்றார்

கரூர் நகராட்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுக்களை பெற்றார்.
கரூர் நகராட்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் மனுக்களை பெற்றார்
Published on

கரூர்,

கரூர் நகராட்சியில் நேற்று முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, கரூர் நகராட்சி 1,2,3,4,5 வார்டு மற்றும் மண்மங்கலம் வட்டம் கோயம்பள்ளியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும், வருகிற 7-ந்தேதி வரை கிராமம் கிராமமாக அரசுத்துறை அலுவலர்கள் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்கள். எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தேதிகளில் அரசுத்துறை அலுவலர்கள் மனுக்களை பெறவுள்ளனர் என்ற தகவலை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன்கூட்டியே தண்டோரா மூலமோ அல்லது ஒலிப்பெருக்கி விளம் பரங்கள் வாயிலாகவோ எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

உரிய விசாரணை

அவ்வாறு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் அன்றைய தினமே, இத்திட்டத்திற்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள ஆன்லைனில் பதிவு செய்யும் முறையில் பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மனுக்களின் மீது உரிய விசாரணை செய்து, தகுதிவாய்ந்த நபர்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றித் தரும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளுக்குட்பட்டு அரசின் உதவிகளை பெற தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவருக்கும் உரிய நலத்திட்ட உதவிகள் செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.

கதவணைகள்

கரூர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி, காவிரியில் புதிய கதவணை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் செய்துள்ளார். மேலும் மாயனூர் கதவணையோடு சேர்த்து புதிதாக 3 கதவணைகள் அமையும்போது, மொத்தமாக 5 டி.எம்.சி தண்ணீரை தேக்கக்கூடிய மாவட்டமாக கரூர் மாவட்டம் இருக்கும். எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பான வாய்ப்பை பயன் படுத்திடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து கரூர் நகராட்சி 6 மற்றும் 7-வது வார்டு பொதுமக்களிடம் குளத்துபாளையம் பகுதியில் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் கிருஷ்ணராய புரம் எம்.எல்.ஏ. கீதா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் திருவிகா, கரூர் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com