

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கோவளம் பகுதியில் இருந்து மீனவர்கள் தினமும் அதிகாலையில் வள்ளங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். அவர்கள் காலை 10 மணியளவில் மீண்டும் கரை திரும்புவார்கள். அதன்படி, நேற்று காலையில் கடலுக்கு சென்றவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்பினர்.
அவர்கள் கரையில் தங்களது வலைகளை விரித்து, அதில் சிக்கி இருந்த மீன்களை சேகரித்து கொண்டிருந்தனர்.
ஒரு படகில் இருந்த வலையை விரித்த போது, அதில் அபூர்வ வகையை சேர்ந்த மீன் ஒன்று சிக்கி இருப்பதை கண்டனர். அந்த மீன் மஞ்சள் நிறத்தில் புள்ளி, புள்ளியாக பாம்பு வடிவில் இருந்தது. அது தப்பி செல்வதற்காக அங்கும் இங்குமாக துள்ளி குதித்தது. இதை பார்த்து கடற்கரையில் நின்றவர்கள் அச்சம் அடைந்து ஒதுங்கினர். ஆனால், ஒரு மீனவர் அந்த மீனை பக்குவமாக பிடித்து தூக்கினார்.
இதுகுறித்து மீனவர் கூறியதாவது:
இந்த மீன் அபூர்வ வகை அஞ்சாலை மீன் ஆகும். இந்த மீனின் உடலில் விஷ தன்மை உள்ளது. இது உணவுக்கு பயன்படாது. ஆனால், இந்த மீனில் இருந்து சிலவகை மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அந்த மீன் கன்னியாகுமரி மீன் கண்காட்சி கூடத்தில் உயிருடன் ஒப்படைக்கப்பட்டது.