

திருவாரூர்,
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம், ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சின்னதம்பி ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இங்கு உள்ள 608 மீனவ கிராமங்களில் 5,893 விசைப்படகுகள், 38 ஆயிரத்து 779 நாட்டு படகுகளை பயன்படுத்தி லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மீனவ தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். தற்போது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் கொரோனா சிறப்பு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மீனவ தொழிலாளர்களுக்கும் சிறப்பு நிவாரண நிதி வழங்க வேண்டும். மேலும் மீனவ தொழிலாளர்களின் நலன் கருதி வருகிற 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மீன் பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.