கார் மீது அரசு பஸ் மோதிய கோர விபத்து: பெங்களூரு அச்சக அதிபரின் குடும்பத்தினர் உள்பட 5 பேர் பலி

ஓசூர் அருகே கார் மீது அரசு பஸ் மோதிய கோர விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அச்சக அதிபர் குடும்பத்தினர் உள்பட 5 பேர் பலியானார்கள். மகளின் திருமணத்திற்காக குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கார் மீது அரசு பஸ் மோதிய கோர விபத்து: பெங்களூரு அச்சக அதிபரின் குடும்பத்தினர் உள்பட 5 பேர் பலி
Published on

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு லட்சுமி நாராயணபுரம் 4-வது மெயின் சாலை 10-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 50). இவர் பெங்களூருவில் அச்சகம் நடத்தி வந்தார். இவரது மனைவி இறந்து விட்டார். இவர்களின் மகள் திருமணம் வருகிற 26-ந் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதையொட்டி சங்கர் குடும்பத்துடன் திருத்தணியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட காரில் புறப்பட்டு சென்றார்.

சங்கருடன், அவரது தம்பி ஆனந்த் (40), இவரது மனைவி சுமதி (32), நண்பர் குபேந்திரன் (51), அவரது மனைவி மற்றொரு சுமதி (45) ஆகியோர் சென்றனர். காரை பெங்களூரு சாய்பாபா நகரைச் சேர்ந்த சேர்ந்த டிரைவர் மணி (45) ஓட்டிச்சென்றார். அவர்கள் சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு பெங்களூருவுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார் நள்ளிரவு 12.15 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி-அட்டகுறுக்கி இடையே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரி நோக்கி கர்நாடக மாநில அரசு சொகுசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. காமன்தொட்டி-அட்டகுறுக்கி இடையே வந்தபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தடம் மாறி, சாலையின் தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது.

பின்னர் அந்த பஸ், சங்கர் குடும்பத்தினர் வந்த கார் மீதும், பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த சங்கர், குபேந்திரன், அவரது மனைவி சுமதி, ஆனந்தின் மனைவி சுமதி, டிரைவர் மணி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். ஆனந்த் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான சங்கர் உள்ளிட்ட 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த ஆனந்தை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விபத்தில் சிக்கிய கர்நாடக மாநில அரசு பஸ் மற்றும் கார், சாலையோரம் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரி ஆகியவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

விபத்துக்குள்ளான கார் ஆனந்திற்கு சொந்தமான கார் ஆகும். இதற்கிடையே விபத்தில் சங்கர் குடும்பத்தினர் உள்பட 5 பேர் பலியான தகவல் அறிந்து அவர்களின் உறவினர்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பதறி அடித்தபடி விரைந்து வந்தனர். அவர்கள் பலியான 5 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

இதையடுத்து நேற்று காலை 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com