வால்பாறையில் தொடர்மழை காரணமாக ஆறுகளில் வெள்ளபெருக்கு

வால்பாறையில் தொடர்மழை காரணமாகஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
வால்பாறையில் தொடர்மழை காரணமாக ஆறுகளில் வெள்ளபெருக்கு
Published on

வால்பாறை,

மலைப்பிரதேசமான வால்பாறையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

குறிப்பாக வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆகிய ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக வறண்டு கிடந்த கூழாங்கல் ஆற்றில் இருகரைகளை தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

அதுபோன்று குடியிருப்பை ஒட்டி உள்ள வாழைத்தோட்டம் ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் வால்பாறை தாசில்தார் ராஜா தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சோலையார் அணையில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பெய்து உள்ளதால், இந்த அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. அதுபோன்று இங்குள்ள மேல்நீரார் மற்றும் நீரார் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தொடர்மழையால் இங்குள்ள அண்ணாநகர் பகுதியில் தடுப்பு சுவர் உடைந்து பழனிமுத்து என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதனால் அந்த வீட்டின் மேற்கூரை சேதமானது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிவாரண முகாம் தயார் நிலையில் உள்ளது.

அதுபோன்று தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதுபோன்று குரங்கு நீர்வீழ்ச்சியிலும் அதிகளவில் தண்ணீர் கொட்டியது.

இதன் காரணமாக அசம்பாவிதமான சம்பவங்கள் நடப்பதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆழியாறு பகுதியில் பெய்த மழை மற்றும் பலத்த காற்றுக்கு ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பல தள்ளுவண்டிகள் சேதம் அடைந்தன. தொடர்மழை காரணமாக ஆழியாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:- வால்பாறையில் 114 மி.மீ., சோலையார் அணை 170 மி.மீ., மேல் நீரார் 91 மி.மீ., நீரார் 100 மி.மீட்டர் ஆகும்.

கனமழை காரணமாக சோலையார் அணைக்கு விநாடிக்கு 850 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com