காய்ச்சல் பாதிப்பு: கல்லடிதிடல் கிராமத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு

இளையான்குடி அருகே காய்ச்சல் பாதிக்கப்பட்ட கல்லடிதிடல் கிராமத்தில் சுகாதாரத்துறை யினர் ஆய்வுசெய்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
காய்ச்சல் பாதிப்பு: கல்லடிதிடல் கிராமத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு
Published on

இளையான்குடி,

இளையான்குடி அருகே சிவகங்கை மாவட்டத்தின் எல்லை கிராமமான கல்லடிதிடலில் கடந்த 2 வாரங்களாக மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. இதுதொடர்பாக இளையான்குடி சுகாதார துறையினருக்கு மனு அளிக்கப்பட்டது. அதன்படி மருத்துவ அலுவலர்கள் வந்து பொதுமக்களுக்கு மருந்துகள் கொடுத்தனர். இருப்பினும் மர்மக்காய்ச்சல் குணமாகவில்லை. காய்ச்சல் மேலும் அதிகரித்து 150-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கல்லடிதிடலில் காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்த குழு அமைத்து கல்லடிதிடல் கிராமத்தில் வீடுதோறும் ஆய்வுகள் செய்தனர்.

மேலும் கிராமமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். கிராமம் முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு, கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

காய்ச்சல் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு பரிசோதனைகள் செய்தனர். இப்பணியில் கண்ணங்குடி, சாலைக்கிராமம் மற்றும் மானாமதுரை சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.

முன்னதாக இந்த பணிகளை மாவட்ட ஊராட்சி செயலாளர் மகாலட்சுமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி ஆகியோர் கிராமமக்களிடம் சுகாதாரம் குறித்து குறைகளை கேட்டறிந்தனர்.

மேலும் பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி அலுவலர் சுப்பையா, வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், துணை தாசில்தார் அசோக்குமார் ஆகியோரும், குடிநீர் வடிகால் பொறியாளரும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com