பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: 175 கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையனை பிடித்த போலீசார்

சென்னை அனகாபுத்தூரில் பெண்ணிடம் சங்கிலி பறித்துவிட்டு தப்பிய கொள்ளையனை 175 கண்காணிப்பு கேமராக்களை 15 நாட்கள் ஆய்வு செய்து போலீசார் பிடித்தனர். தப்பி ஓடியபோது அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: 175 கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையனை பிடித்த போலீசார்
Published on

தாம்பரம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. அதையும் மீறி, குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை ஏதேனும் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்து விடுகிறது.

இந்தநிலையில், அனகாபுத்தூரில் வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று ஒரு பெண்ணிடம் சங்கிலி பறித்தார். பின்னர் 2 மணி நேரத்தில் வியாசர்பாடியில் உள்ள அடகு கடையில் நகையை விற்று பணம் வாங்கிக்கொண்டு தப்பிச்சென்றார். அவரை, 175 கண்காணிப்பு கேமராக்களை 15 நாட்களாக ஆய்வு செய்து போலீசார் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை அனகாபுத்தூர் லட்சுமி நகர் மெயின் ரோட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சேலத்தில் இருந்து சத்தியவாணி (வயது 57) என்பவர் வந்தார். இவர் சேலம் மாவட்ட கருவூலத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில், கடந்த மாதம் 18-ந்தேதி சத்தியவாணி, தனது மகள் வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த மர்மநபர் ஒருவர் சத்தியவாணி கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியை பறித்துச்சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளியை உடனடியாக கைது செய்ய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

சம்பவம் நடந்த பகுதியான அனகாபுத்தூரில் இருந்து கொள்ளையன் தப்பிச்சென்ற குன்றத்தூர், மாங்காடு, போரூர், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், ஓட்டேரி என கொள்ளையன் சென்ற பகுதிகளில் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த 175 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் 15 நாட்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் கொள்ளையன் வியாசர்பாடியில் உள்ள ஒரு அடகுக்கடையில் 2 மணி நேரத்தில் தாலிச்சங்கிலியை விற்று பணம் வாங்கி தப்பியதை ஒவ்வொரு கேமராவையும் பார்த்து அந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்தனர்.

இதற்கிடையே, ஸ்கூட்டரின் எண்ணை வைத்து பார்த்தபோது, அது ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்து தர்கா ஊழியர் ஒருவரிடம் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேரமாக்களில் பதிவான உருவத்தை வைத்து நடத்திய விசாரணையில், அந்த நபர் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, ஜங்கிலி கணேஷ் ஆகியோரின் கூட்டாளி புறா கார்த்திக் (28) என்பது தெரியவந்தது. இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

சென்னைக்கு மாதம் ஒருமுறை வரும் கார்த்திக், முதலில் ஸ்கூட்டர்களை திருடுவார். பின்னர் அதில் சென்று ஏதேனும் ஒரு பகுதியில் பெண்களிடம் சங்கிலி பறிப்பார். அதை விற்று கிடைக்கும் பணத்துடன் ஈரோட்டுக்கு சென்றுவிடுவார். அங்கு, சூரம்பட்டு நால்ரோட்டில் வசிக்கும் ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கார்த்திக், நாய் மற்றும் புறாக்களை வளர்த்து வந்துள்ளார்.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் 3 மணியில் இருந்து 4 மணிக்குள் அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு தண்ணீர் தொட்டி சுத்தம் செய்ய வந்திருப்பதாக கூறுவார். அங்கிருக்கும் பெண்களிடம் பேச்சு கொடுத்து குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து சங்கிலி பறிக்கும் செயல்களிடம் ஈடுபட்டு வந்துள்ளார்.

நாய் வாங்குவதில் அலாதி பிரியம் கொண்ட புறா கார்த்திக்கை தேடி தனிப்படை போலீசார் ஈரோடு சென்றனர். நாய் விற்பனைக்கு உள்ளதாக கூறி அவரை நேரில் வரவழைத்தனர். அங்கு போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய கார்த்திக்கை சுமார் ஒரு கி.மீ. தூரம் விரட்டிச்சென்றனர்.

அப்போது கால் தவறி கீழே விழுந்த கார்த்திக்கின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவரை பிடித்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்ததும் கார்த்திக்கை போலீசார் சென்னை அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகள் ரூ.3 லட்சம் ஆகியவற்றை மீட்டனர்.

175 கண்காணிப்பு கேமராக்களை 15 நாட்கள் ஆய்வு செய்து பெண்ணிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை கைது செய்த தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com