வேதாரண்யத்தில் உணவு பஞ்சம்: பால் பாக்கெட்டுகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறிக்கும் மக்கள்

வேதாரண்யத்தை வேட்டையாடிய புயல் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நிவாரண உதவிகள் கிடைக்காத விரக்தியில் பால் பாக்கெட்டுகளை ஏற்றி வரும் வாகனங்களை மக்கள் வழிமறிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.
வேதாரண்யத்தில் உணவு பஞ்சம்: பால் பாக்கெட்டுகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறிக்கும் மக்கள்
Published on

வேதாரண்யம்,

வேதாரண்யத்தில் கஜா புயல் வீசி 7 நாட்களாகி விட்டன. நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

நிவாரண உதவிகளுக்காக சாலையோரம் குடும்பம், குடும்பமாக காத்திருப்பது, நிவாரண பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து உதவி கேட்பது என்பன போன்ற சம்பவங்கள் கடந்த சில நாட்களாக மக்களின் பரிதாப நிலைமையை உலகிற்கு உணர்த்தி வருகின்றன. இந்த சம்பவங்கள் வேதாரண்யத்தில் துயரம் நீடித்து வருவதை காட்டுகின்றன.

வீடுகளையும், உடைமை களையும் இழந்த மக்கள் அரசை மட்டுமே நம்பி நிவாரண முகாம்களில் காத்து கிடக்கிறார்கள். ஆனால் வேதாரண்யம் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் உணவு பற்றாக்குறை நீடிப்பதால், மக்கள் செய்வது அறியாது நிலைகுலைந்து போய் உள்ளனர். நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் விரக்தியில் உள்ளனர்.

வேதாரண்யத்தை சுற்றி உள்ள பல பகுதிகளில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து விற்பனைக்காக பால் ஏற்றி வரும் வாகனங்களை மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று வழிமறித்து இலவசமாக பால் கேட்கும் பரிதாப சம்பவங்கள் நேற்று ஆங்காங்கே நடந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com