கோவை ரெயில்நிலையத்தில் தவித்த பயணிகளுக்கு உணவு - கலெக்டர் ராஜாமணி வழங்கினார்

கோவை ரெயில் நிலையத்தில் தவித்த பயணிகளுக்கு கலெக்டர் ராஜாமணி உணவு வழங்கினார்.
கோவை ரெயில்நிலையத்தில் தவித்த பயணிகளுக்கு உணவு - கலெக்டர் ராஜாமணி வழங்கினார்
Published on

கோவை,

கொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்யைக நாடுமுழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி காய்கறி, மளிகை கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் கோவையில் இருந்து பஸ், ரெயில்கள் இயக்கப்படவில்லை.

இ்ந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து நேற்று 9 ரெயில்கள் வந்தன. அந்த ரெயிலில் இருந்து கோவை வந்த பயணிகள் வீடுகளுக்கு செல்ல பஸ், ஆட்டோ இன்றி தவித்தனர். அப்போது அவர்கள் ரெயில்நிலையம் முன்பும், அந்த பகுதியில் உள்ள கடைகள் முன்பும் அமர்ந்து இருந்தனர்.இதையறிந்த தன்னார் வலர்கள் அவர்களுக்கு தயிர் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட உணவுகளை சமைத்து வந்து கொடுத்தனர்.

அதில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் சண்முகம் மணி என்பவர் தனது வீட்டில் இருந்து சப்பாத்தி, பொங்கல், தோசை உள்ளிட்ட உணவுகளை தயார் செய்து கொண்டு வந்தார். பின்னர் அவற்றை ரெயில்நிலையத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு கொடுத்து உதவி செய்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அன்று பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்விடுத்து இருந் தார். ஆனால் ரெயிலில் இருந்து வந்த பயணிகள் சாலையோரம் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கலெக்டர் ராஜாமணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் கோவை ரெயில்நிலையத்துக்கு நேரில் சென்றார். அங்கு உணவு இன்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கினார். தொடர்ந்து அந்த பயணிகள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு அவாகளுக்கு மருத்துவ குழுவினர் பல்வேறு கட்ட பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா நோய் பரவலை தடுக்க நேற்று அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. கோவை அரசு ஆஸ்பத்திரி உள்மற்றும் வெளி நோயாளிகள் உணவு கிடைக்காமல் சிரமப்படுவதை தடுக்க இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நோயாளிகளுக்கு நேற்று உணவு பொட்டலங்கள் வழங்கப்படடன. ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் உள்பட பலர் உணவு பொட்டலங்களை வழங்கினார்கள். இதேபோல் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கிருத்திகை மாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பில் காவல்துறையினர், செவிலியர் உள்பட பலருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்த அமைப்புகளின் சேவையை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com