

சேலம்,
தமிழகத்தின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களுக்கான உணவு தானிய இயக்க ஆய்வுக்கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சென்னை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் துணை வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது:-ஒவ்வொரு வட்டாரத்தின் உணவு தானிய உற்பத்திக்கான சாகுபடி பரப்பு விடுபாடின்றி ஒத்திசைவு செய்யவும், பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்வதில் அனைத்து நிலை கள அலுவலர்களும் சிறப்பாக பணிபுரிந்து உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றிட வேண்டும். நெல் சாகுபடி செய்யப்படும் கிராமங்களில் 80 சதவீதம் பரப்பிற்கு மேல் திருந்திய நெல் சாகுபடி இனத்திற்கு கொண்டு வந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
இந்தாண்டு சிறுதானிய பயிர் ஆண்டாக கடைபிடிக்கப்படுவதால் அதிகளவில் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி செய்யவும், மக்காச்சோளம் பயிரினை அதிக பரப்பில் சாகுபடி செய்யவும் விவசாயிகள் முன்வர வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு சோளம், கம்பு மற்றும் ராகி ஆகியவற்றால் சிறுதளைகள் (மினி கிட்) வழங்கப்பட உள்ளது.
பயறுவகை பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்த ஊடுபயிர் மற்றும் வரப்பு பயிர் சாகுபடியை முழுமையாக ஒத்திசைவு செய்ய வேண்டும். மேலும், அதிக மகசூல் தரும் புதிய ரகங்களை பயிரிட்டு அதற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களை கையாண்டும் கூடுதல் மகசூல் பெற்றிட விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
நடப்பு ஆண்டில் போதிய மழை எதிர்நோக்கப்படுவதால் பயிர் சாகுபடிக்கு மிகவும் உகந்ததாக உள்ள சூழ்நிலையில் உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தி இலக்கை முழுமையாக அடைவதன் மூலம் தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி இலக்கான 130 லட்சம் மெட்ரிக் டன்னை எய்திடவும் செயல் திட்டம் வகுத்து பணியாற்ற வேண்டும்.
இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பயிர் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீட்டு தொகை செலுத்துவதற்கு நவம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள் அனைவரும் கடைசி நாள் வரையில் காத்திருக்காமல் வருகிற 31-ந் தேதிக்குள் பயிர் காப்பீட்டு தொகையினை நேரடியாக பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகளில் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர்கள் குமாரவடிவேல், சண்முகம், ஜஸ்டின், சேகர், துணை இயக்குனர்கள் ஜெகநாதன், செல்லதுரை, சவுந்தரராஜன், தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.