கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்
Published on

ஈரோடு,

கோமாரி நோய் பரவுவதை தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாடுகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கியது. ஈரோடு அருகே செம்மாம்பாளையம் கிராமத்தில் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

முகாமுக்கு கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். துணை இயக்குனர் தங்கவேல், உதவி இயக்குனர்கள் குமாரரத்தினம், கோவிந்தராஜ், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மாடுகளுக்கு கால்நடை டாக்டர்கள் தடுப்பூசி போட்டனர்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 761 பசுக்கள், 75 ஆயிரத்து 289 எருமைகள் என மொத்தம் 3 லட்சத்து 59 ஆயிரத்து 50 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக 108 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை உதவி டாக்டர், கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் ஒவ்வொரு கிராமமாக சென்று மாடுகளுக்கு தடுப்பூசி போடுகிறார்கள். இந்த முகாம் அடுத்த மாதம் (நவம்பர்) 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் முகாம் நடக்கும். எனவே விவசாயிகள் தங்களது கிராமங்களில் முகாம் நடக்கும் போது மாடுகளை கொண்டு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com