2 ஆண்டுகளாகியும் நிறைவு பெறாத செங்கழுநீரம்மன் தேர் கிராம மக்கள் புகார்

வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் 2 ஆண்டுகளாகியும் தேர் செய்யும் பணி நிறைவு பெறவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
2 ஆண்டுகளாகியும் நிறைவு பெறாத செங்கழுநீரம்மன் தேர் கிராம மக்கள் புகார்
Published on

அரியாங்குப்பம்,

புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 5-வது வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடப்பது வழக்கம். இதற்காக சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது பழுதானதால், புதிய தேர் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பேரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதுதவிர பொதுமக்களிடம் நன்கொடை பெற்று மொத்தம் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக 35 அடி உயரத்தில் தேர் செய்யும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக திருப்பணிக்குழுவும் அமைக்கப்பட்டது. 2 ஆண்டுகளாகியும் நிறைவுபெறாமல் தேர் செய்யும் பணி மந்தகதியில் நடந்து வருவதாகவும் புதிய தேரின் மேற்கூரை குறு கிய நிலையில் அமைக்கப்படுவதாகவும் கிராம மக்கள் கோவில் நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வீராம்பட்டினத்தில் கிராம மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பழைய தேரின் அளவிலேயே புதிய தேரின் மேற்கூரையை அமைப்பது என்றும், தேர் அமைக்கும் பணியை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அப்போது புதிய தேர் செய்வதற்காக அமைக்கப்பட்ட திருப்பணிக்குழு மீது சிலர் புகார் கூறியதால், லேசான சலசலப்பு ஏற்பட்டது.

தொற்று பரவல் காரணமாக செங்கழுநீரம்மன் கோவில் ஆடி தேரோட்டம் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com