பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றும் 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு பதக்கம் வழங்கப்படும் அமைச்சர் சரோஜா பேச்சு

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்கு சிறப்பாக செயலாற்றும் 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும் என நாமக்கல்லில் அமைச்சர் சரோஜா பேசினார்.
பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றும் 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு பதக்கம் வழங்கப்படும் அமைச்சர் சரோஜா பேச்சு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா தலைமை தாங்கினார். கலெக்டர் மெகராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் சரோஜா சமூக நலத்திட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் பாலின விகிதம் அதிகரித்தல் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அமைச்சர் சரோஜா பேசியதாவது:-

தொட்டில் குழந்தை திட்டம் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களினால் பாலின பிறப்பு விகிதம் 2019-ம் ஆண்டில் 936 ஆக உயர்ந்து உள்ளது. திருமண நிதி உதவி திட்டத்தால் தமிழகத்தில் 2019-2020-ம் ஆண்டில் 1.04 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர். 2020-2021-ம் நிதியாண்டில் பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக ரூ.726.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பெண் குழந்தைகளுக்காக, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய சேவையை நினைவுபடுத்தும் விதத்தில், அவரின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்பட உள்ளது. மேலும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்விற்கான ஐந்து புதிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அதன்படி அரசு இல்லங்களில் வளரும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும்போது கிடைக்கும் வகையில், தலா ரூ.2 லட்சம் வீதம் அவர்களது பெயரில் வங்கியில் செலுத்தப்படும். அரசு இல்லங்களை விட்டு வெளியேறும் குழந்தைகள், சமுதாயத்தில் தங்கள் வாழ்க்கையை நிறைவாக அமைத்து கொள்ள அந்த தொகை ஏதுவாக அமையும்.

தமிழகத்தில், பெண் சிசு கொலைகள் குறைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மட்டும் பெண் குழந்தைகள் பாலின விகிதம் சராசரி பாலின விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு, பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றும் 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் சரோஜா பேசினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) டாக்டர் சாந்தி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சோமசுந்தரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜான்சி ராணி உள்பட அரசுத்துறை அலுவலர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com