பேரையூர் தாலுகாவில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒருவாரத்தில் நிவாரணம் வேளாண் அதிகாரி தகவல்

பேரையூர் தாலுகாவில் கடந்த ஆண்டு மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒருவாரத்தில் நிவாரணம் வழங்கப்படும் என்று வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேரையூர் தாலுகாவில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒருவாரத்தில் நிவாரணம் வேளாண் அதிகாரி தகவல்
Published on

பேரையூர்,

பேரையூர் தாலுகாவில் கடந்த ஆண்டு பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்குதலில் 2 ஆயிரம் ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பேரையூர் தாலுகா விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இதையடுத்து வேளாண்மை துறையினர் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றனர். அதன் அடிப்படையில் வேளாண்மை துறையினர், வருவாய்த்துறையினர் ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்ட ஏக்கர்கள் எவ்வளவு என்று கணக்கெடுத்தனர்.

அதன்பிறகு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த மார்ச் மாதமே நிவாரணம் வழங்கப்பட இருந்த நிலையில் தேர்தல் வந்ததால் நிவாரணம் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பாதிக்கப்பட்ட ஏக்கர்களை முழுமையாக 2 துறைகளையும் சேர்ந்த அலுவலர்கள் கணக்கெடுத்தனர்.

தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக வேளாண்மை துறையினர் கூறி உள்ளனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் மணிமாறன் கூறும்போது, சென்ற ஆண்டு மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலில் நஷ்டம் ஏற்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு விவரம் குறித்து மனுக்கள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை இணைந்து கணக்கெடுத்து உள்ளோம். பேரையூர் தாலுகாவை பொறுத்தவரை டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் 4,750 ஏக்கரும், சேடப்பட்டி வட்டாரத்தில் 16,250 ஏக்கரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஹெக்டேருக்கு ரூ.7,410 நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை நிவாரணம் வழங்கப்படும். இந்த நிவாரணம் விவசாயிகள் கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com