

மும்பை,
கொரோனா 2-வது அலை நாட்டை கொலை களமாக மாற்றியுள்ளது. தினம், தினம் அதிகரிக்கும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்தநிலையில் நிபுணர்கள் கொரோனா 3-வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதன்மூலம் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு மும்பை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி குல்கர்னி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மும்பை மாநகராட்சியின் மூத்த வழக்கறிஞர் அனில் சக்ரே கூறுகையில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் வரை 10 வயதுக்கு உள்பட்ட 10 ஆயிரம் குழந்தைகள் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், இதில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாகவும் கூறினார்.
இதேபோல 10-ல் இருந்து 18 வயதுக்கு உள்பட்ட 33 குழந்தைகள் கொரோனாவால் இருந்துள்ளனர் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், மராட்டியத்தில் குழந்தைகளுக்கு கொரோனா பரவலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநில அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
மேலும் அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து குழந்தைகளுக்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவேண்டும் என தெரிவித்தனர்.
இதற்காக நிபுணர்கள், குழந்தை மருத்துவர்கள் மற்றும் பிற அமைப்புகளை மாநில அரசு அணுகவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் 19-ந் தேதி அடுத்த விசாரணையின் போது அரசு தரப்பு தங்கள் பதிலை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.