தரமணி பறக்கும் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ரெயில்வே ஊழியர்கள் 2 பேர் கைது

தரமணி பறக்கும் ரெயில் நிலையத்தில் காதலனுடன் இருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தரமணி பறக்கும் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ரெயில்வே ஊழியர்கள் 2 பேர் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் கேரளாவைச் சேர்ந்த 19 வயது மாணவி, நேற்று முன்தினம் தனது காதலனுடன் தரமணி பறக்கும் ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது தரமணி ரெயில் நிலையத்தில் லிப்ட் ஆபரேட்டர்களாக பணியாற்றும் தரமணியை சேர்ந்த லூக்காஸ்(வயது 21), ஸ்ரீராம் மற்றும் ரெயில்வே ஊழியர் லோகேஸ்வரன் (23) உள்பட சிலர் அங்கு வந்தனர்.

அவர்கள் காதலர்களிடம் சென்று, உங்கள் இருவர் மீதும் சந்தேகமாக உள்ளது. இங்கு தனியாக அமர்ந்து என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டனர். பின்னர் ரூ.5 ஆயிரம் தரவேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது வழக்கு போடப்படும் என்று மிரட்டியதாக தெரிகிறது.

பின்னர் காதலனை அங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு கல்லூரி மாணவியை மட்டும் அவர்கள் முதல் தளத்துக்கு அழைத்துச்சென்றனர். திடீரென அவர்கள், கல்லூரி மாணவியை கட்டிப்பிடித்து, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி, அவர்களிடம் இருந்து தப்பி கீழே ஓடிவந்தார். பின்னர் இதுபற்றி அவர், திருவான்மியூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில்வே ஊழியர்களான லூக்காஸ், லோகேஸ்வரன் இருவரையும் கைது செய்தனர். இதில் லூக்காஸ் வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதாகவும், பகுதி நேரமாக ரெயில்வேயில் வேலை செய்வதாகவும் தெரிகிறது.

பறக்கும் ரெயில் நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு மின்சார ரெயிலில் பாலியல் தொல்லைக்கு உள்ளான ஒரு பெண்ணை போலீஸ்காரர் ஒருவர் காப்பாற்றிய சம்பவமும் நடைபெற்றது.

எனவே இவர்கள், பறக்கும் ரெயில் நிலையத்தில் தனியாக இருந்த வேறு எந்த பெண்களிடமாவது இதுபோல் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்ரீராமை தேடி வருவதுடன், இது தொடர்பாக மேலும் சில ரெயில்வே ஊழியர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com