கர்நாடகத்தில், 25 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் எடியூரப்பா தொடங்கி வைத்தார்

கர்நாடகத்தில் 25 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
கர்நாடகத்தில், 25 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் எடியூரப்பா தொடங்கி வைத்தார்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையை தடுக்கும் நோக்கத்தில் கடந்த மே மாதம் 11-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கட்டிட தொழிலாளர்கள் உள்பட பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு உதவித்தொகையை மாநில அரசு அறிவித்தது.

கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று அரசு கூறியது. அதன்படி அந்த கட்டிட தொழிலாளர்களுக்கு உதவித்தொகையை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் திட்ட தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்குவதை தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது:-

25 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.749 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. சலூன்களில் முடி திருத்துபவர்கள், தையல் தொழிலாளிகள், வீட்டு வேலைக்காரர்கள், மெக்கானிக்குகள், மர வேலை செய்பவர்கள், சலவை தொழிலாளர்கள் உள்பட 11 வகையான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதற்காக சேவா சிந்து இணைய பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 3.3 லட்சம் தொழிலாளர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். மொத்தம் ரூ.1,250 கோடிக்கு நிவாரண தொகுப்பு திட்டத்தை அறிவித்தேன். அதன் பிறகு மீனவர்கள், அர்ச்சகர்கள் பிற தொழிலாளர்களுக்கும் கூடுதலாக ரூ.500 கோடி நிவாரண திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியுள்ளேன்.

கொரோனா 2-வது அலையை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி இயக்கமும் வேகமான முறையில் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் இதுவரை 1.47 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கட்டிட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனங்கள், தங்களின் கட்டிட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதில் தொழிலாளர் நலத்துறை மந்திரி சிவராம் ஹெப்பார், அத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கல்பனா, மின் ஆட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் சாவ்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com