கொரோனா நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் செலுத்த கூடுதல் வசதி முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் தகவல்

முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் செலுத்த கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்லூரி டீன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் செலுத்த கூடுதல் வசதி முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் தகவல்
Published on

விக்கிரவாண்டி,

முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு தனி கவனம் செலுத்தி சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், செயற்கை சுவாசம் அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆக்சிஜன் வழங்குவதற்கு தேவையான வசதிகள் மேலும் அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குந்தவி தேவி நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 324 கர்ப்பிணிபெண்கள் அனுமதிக்கப்பட்டனர். மகப்பேறு துறைத்தலைவர் டாக்டர் ராஜேஸ்வரி, டாக்டர்கள் வில்வ பிரியா, தங்கமணி ஆகியோரின் சிறப்பான கவனிப்பு காரணமாக 19 பெண்கள் சுகப்பிரசவமும் 71 பெண்கள் அறுவை சிகிச்சை மூலமாகவும் குழந்தை பெற்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மூச்சு திணறலுடன், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவுடனும் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஆக்சிஜன் தேவையான அளவுக்கு அதிநவீன கருவிகள் மூலம் செலுத்தி வருகிறோம். கடந்த மே மாத தொடக்கத்தில் உயர் அளவு ஆக்சிஜன் செலுத்தும் கருவி 3 மட்டுமே மருத்துவமனையில் இருந்தது. தற்போது தமிழ்நாடு சேவை கழகத்திலிருந்து 27 கருவிகளும், மாவட்ட கலெக்டர் நிதியில் இருந்து 2 கருவிகளும் பெறப்பட்டு மொத்தம் 32 கருவிகள் உள்ளன.

ஆக்சிஜன் தேவை பயன்பாடுகள் அதிகமாகியதால் மருத்துவமனையில் இருந்த 6 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் கிடங்கு 10 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் கிடங்காக மாற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மருத்துவமனையில் தற்போது, கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆக்சிஜன் தேவை அதிகமாவதால் மருத்துவமனையில் 24 கிலோ லிட்டர் திரவஆக்சிஜன் கிடங்காக மாற்றப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதனால் தடையின்றி தேவையான அளவுக்கு நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் வசதி ஏற்படும். கொரோனா நோயாளிகளுக்கு மயக்கவியல் துறை பேராசிரியர்கள் முருகேசன், ரவிக்குமார், தர்மலிங்கம், வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com