கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 500 ஆக்சிஜன் கலன்கள் கலெக்டர் கார்த்திகா தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 500 ஆக்சிஜன் கலன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் கார்த்திகா கூறினார்.
கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 500 ஆக்சிஜன் கலன்கள் கலெக்டர் கார்த்திகா தகவல்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், திட்ட இயக்குனர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் 850 படுக்கை வசதிகள், 500 ஆக்சிஜன் கலன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இதேபோல் பென்னாகரம் தாலுகா நல்லானூர் ஜெயம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடத்தூர் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரியில் கூடுதலாக 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பாலக்கோடு, அரூர் மற்றும் பென்னாகரம் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு பொதுமக்கள் சுயபாதுகாப்புடன் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையான இன்றியமையாத பணிகளுக்கும் மட்டும் வெளியே சென்று பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) கவுரவ்குமார், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவள்ளி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் இளங்கோவன், சிவக்குமார், சந்திரசேகர் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com